Saturday, May 17, 2008

வெட்கமாய்....


என்னவளின் வெட்கம்....

உன்னை நினைக்கும் போதெல்லாம்
எங்கிருந்தோ வந்துவிடுகிறது
இந்த வெட்கம் !

உன் கைவிரல்களில் வளர்வது
நகங்கள் மட்டுமா ?
என்னை தொடும்போதெல்லாம்
எனக்குள் வெட்கம் வளர்ந்துவிடுகிறதே !

முத்தம் சேமிக்கிறேன் - என்று
முத்தமிடும்போதெல்லாம்
எனக்குள் - வட்டியாய் வெட்கமும்
சேர்ந்துவிடுகிறது - இது
நடப்பு கணக்கல்ல ?
காதல் கணக்கு !

இச்சீ போடா - என்றேன்
அதற்குள் அவன்
இன்னொருமுறை சொல்லே என்றான் !
வெட்கம் என்னை வென்றுவிட
வெகுளியாய் நான் !?

பூ வாங்கிவா என்றேன்,
பூக்களுக்கு யாராவது - பூ
சூடுவார்களா என்றான் - புரியாமல்
புன்னகைத்தபோது - உன்
கூந்தலே பூங்கொத்துதான் என்றதும்
வெட்கம் அங்கும் வேரூன்றிவிட்டது !

அவனுடன் வண்டியில்
வேகமாய் செல்லும்போதெல்லாம் ;
அதைவிட வேகமாய் வந்து
வெட்கம் விபத்துக்குள்ளாக்கிவிடுகிறது
என்னை ?!

தோழிகள்
கிண்டல் செய்யும்போதெல்லாம்
உன்னை நினைத்து
வெட்கத்தையே சிந்திவிடுகிறேன் நான் !

கடிகாரமுள் சேரும்போதெல்லாம்
வெட்கப்பட்டு கொள்கின்றேன் நான்;
நீ கனவில்
கட்டியணைத்ததை நினைத்து !

பாதி தூக்கத்தில், அம்மா
காப்பியுடன் எழுப்ப
நீ குடிச்சுட்டுகுடு என்றேன்;
என்னடி புதுப்பழக்கம் - என்ற
அம்மாவிடம் ஒன்றுமில்லை
என்றபடியே
காபியோடு வெட்கத்தையும்
குடித்துவிட்டேன் !

குளிக்கும்போது - சோப்பை
தவறவிட்டுவிட்டேன் என்றேன்;
அதற்கு அவன் - உன்
வெட்கநுரையில் நானே
வலுக்கிவிழும்போது
சோப்பு எம்மாத்திரம் என்றதும்
இன்னும் ஈரமாகிவிட்டேன்,
வெட்கத்தில் !

யாரோ கூட்டத்தில் - உன்
பெயரை கூப்பிட
சட்டென்று திரும்பி ஏமார்ந்தேன்
திரும்பவும் வெட்கம் எதிரே !

திருவிழாவின் போது
ஆசையாய் வேடிக்கை பார்க்க
அவனோ என்னையே பார்க்க ?
திருவிழா ஒருநாள்தான் - ஆனால்
எனக்கு உன்னுடன் இருக்கும்,
ஒவ்வொருநாளும் திருவிழாதான்
என்றதும் - அங்கும்
வெட்கமே வாடிக்கையானது !

சத்தமில்லாமல் அவன்
முத்தமிடும்போதெல்லாம்,
சத்தம்போட்டுவிடுகிறது - இந்த
அருமை வெட்கம் !

வெட்கம் ! வெட்கம் !